ஆபத்தை உணராமல் பேருந்தின் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை பேருந்து நிலையத்தில் இருந்து பெரியபட்டிணம் சென்ற பேருந்தில் பயணித்த சில பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின்படி, பேருந்து செல்லும்போது மாணவர்களின் கால்கள் தரையில் உரசியபடியே நீண்டதூரம் செல்வதை காண முடிந்தது. இது பார்பவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பேருந்து முழுவதும் மாணவர்கள் இருப்பதும், வெளியே சிலர் தொங்குவதும் தெரிகிறது. இவ்வளவு பேரை ஏற்றி பயணித்த நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வட கிழக்கு பருவ மழை தொடங்கி கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்து பற்றாக்குறை காரணமாக, ஆபத்தை உணராமல் மாணவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது என்பதால், அரசு இவ்விஷயத்தில் உடனடி கவனம் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏதும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.