மதுரையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட 81 பேர் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.
நேற்று மதுரையில் பல இடங்களில் மாணவர், இளைஞர் அமைப்பினர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு குழுவினர் தமுக்கம் மைதானத்திலுள்ள தமிழன்னை சிலையை சூழ்ந்து, மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பினர். காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். அதில், 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், தல்லாகுளத்தில் போராட்டம் நடத்தியதால் 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட 81 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.