நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விடுதியில் 2 நாட்களாக உணவு வழங்கவில்லை எனக்கூறி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
கொல்லிமலை செங்கரையில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில், 445 பேர் படித்து வருகிறார்கள். பள்ளி விடுதியில் கடந்த 2 நாட்களாக மாணவ, மாணவிகளுக்கு உணவு தராத நிலையில், அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் செங்கரை, சோளக்காடு நெடுஞ்சாலையில் காலை ஏழு மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி விடுதியில் குளியலறை, கழிவறை, குடிநீர், மின்சார வசதிகள் செய்துதர வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் செங்கரை, சோளக்காடு செல்லும் சாலையில் ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கொல்லிமலை வட்டாட்சியர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்தில் அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.