செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்
மதுரையில் சாதிச் சான்றிதழ் கோரி பழங்குடியின மாணாக்கர் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது. சாதிச்சான்று கிடைக்காவிட்டால் திரும்ப மலைப் பகுதிக்கே திரும்ப வேண்டியதுதான் என்கின்றனர் மாணவ, மாணவிகள். என்ன நடந்தது? விரிவாக அறியலாம்...
மதுரை சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் காட்டுநாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்க கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற சாதிச்சான்றிதழ் கடந்தாண்டு வரை தங்களுக்கு வழங்கப்பட்டு வந்தததாகவும், ஆனால், விசாரணை மேற்கொண்ட பிறகே அதை மீண்டும் தர இயலும் என அதிகாரிகள் தற்போது கூறுவதாகவும் மாணாக்கரும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.
இதனால், கல்லூரியில் சேர இயலாத அவல நிலை உள்ளதாகவும் சில கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் தர வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது, “மேற்கண்ட பகுதியில் வசித்து வரும் மக்களின் பழக்க வழக்கங்கள் ஏதும் பழங்குடியினர் பின்பற்றக்கூடியது போன்று இல்லாத காரணத்தினாலும் மெய்த்தன்மை சந்தேகத்திற்குரியதாக உள்ளதாலும் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறோம். எனினும் விசாரணை அடிப்படையிலும், ஆவணங்கள் அடிப்படையிலும் தீர விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.