திருவள்ளூர்: மின்சாரத்தை தலைமை ஆசிரியர் துண்டித்ததாக போராட்டத்தில் குதித்த மாணவிகள்

திருவள்ளூர்: மின்சாரத்தை தலைமை ஆசிரியர் துண்டித்ததாக போராட்டத்தில் குதித்த மாணவிகள்
திருவள்ளூர்: மின்சாரத்தை தலைமை ஆசிரியர் துண்டித்ததாக போராட்டத்தில் குதித்த மாணவிகள்
Published on

பள்ளியின் மின் இணைப்பை துண்டித்ததால் மின்விசிறி இல்லாமலும், குடிநீர் பிரச்னை ஏற்படுவதாகவும், பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா என்பவர் மின்சாரம் வீணாவதாகக் கூறி மின் இணைப்பை துண்டித்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் குடிநீரின்றியும் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தலைமை ஆசிரியரின் இந்த செயல் மாணவிகளை ஆத்திரமடைய செய்ததால் 500க்கும் மேற்ப்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து காந்திசிலை அருகில் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஆசிரியர்களும் இறங்கியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக முடங்கியிருக்கிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவியர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பள்ளியில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே திருத்தணி சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் மற்றும் மாணவிகள் புகார் அளித்திருக்கின்றனர். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட எஸ். சந்திரன் எம்.எல்.ஏ, மின்வாரிய அலுவலர்களை வரவழைத்து உடனடியாக மின்பழுதை சரி செய்து குடிநீர் வசதியும் செய்துகொடுத்திருக்கிறார். மேலும் மாணவிகள், ஆசிரியர்களுடன் விரோதப்போக்கில் செயல்படும் தலைமை ஆசிரியையும் எச்சரித்திருக்கிறார். 

இருப்பினும் ஓரிரு நாட்களில் மீண்டும் மின்சாரத்தை துண்டித்து குடிநீர் விநியோகம் நிறுத்தியதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டினர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com