புதுக்கோட்டையில் சிலம்ப பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்ணீர் மல்க சிலம்பம் சுற்றியவாறு அவரது மாணவர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வும் இறுதி ஊர்வலத்தின்போது சிலம்பம் சுற்றியவாறு இடுகாடு வரை சென்று மரியாதை செலுத்திய நிகழ்வும் காண்போரை கண்கலங்க வைத்தது.
புதுக்கோட்டை காமராஜபுரம் 32ஆம் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். தற்போது 36 வயதான அந்தோணிராஜ் தனது 11 ஆவது வயதில் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்து தொடர்ந்தார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பக் கலையை கற்று வருவதோடு தற்போது சிலம்ப பயிற்சியாளராகவும் திகழ்கிறார். இவரிடம் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த செய்தி அவர்களது மாணவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள சிலம்ப பயிற்சியாளர்களையும் ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த தகவலை அறிந்த அவரிடம் சிலம்பக்கலை பயின்று வந்த மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது தங்களுக்கு சிலம்பக் கலையை கற்றுக்கொடுத்த குருவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க சிலம்பம் சுற்றி அந்தோணிராஜிற்க்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் அவரது இறுதி ஊர்வலத்தின்போது அவரிடம் சிலம்பம் பயின்ற மாணவர்கள் இடுகாடு வரை சிலம்பம் சுற்றியவாறு கண்ணீரோடு சென்றது காண்போரை கண்கலங்க வைத்தது.