செய்தியாளர்: தினேஷ்குமார்
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் பதிவு அவசியமாகப்பட்டுள்ளது. கைவிரல் ரேகை, விழித்திரை பதிவு, புகைப்படம் போன்ற விவரங்களின் அடிப்படையில் 12 இலக்கம் கொண்ட இந்த ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆதார் எண் அரசு திட்டங்கள் பெறவும், வங்கி சேவைகள் பெறவும் தற்போது அவசியமான ஒன்றாக உள்ளது.
தமிழகத்தில். 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 1.50 கோடி முதல் 2 கோடி மாணவர்கள் வரை பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாணவர்கள் ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் போது சிறு சிறு தவறுகள் ஏற்படுவதும் அதனை திருத்தம் செய்ய சிரமங்களை சந்திப்பதும் இயல்பாகி விட்டது.
அதேபோன்று ஆதார் இல்லாத மாணவர்கள், உதவி தொகை அறிவிப்பு வந்தவுடன் அவசர அவசரமாக ஆதார் கோரி விண்ணப்பிக்கும் போது, அது மாணவர்களுக்கு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும். இதன் காரணமாக உரிய நேரத்தில் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆகையால் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக ஆதார் அட்டை பெறும் வசதியை ஏற்படுத்தித்தர பள்ளிக்கல்வித் துறை புதிய திட்டத்தை உருவாக்கியது.
இதன்படி ஆதார் நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பள்ளிகளில் நேரடியாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் ஆதார் மையங்களை அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 'எல்காட்' உதவியுடன் இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை செயல்படுத்த உள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்தினர் ஆதார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவர்கள் மூலமாக பள்ளிகளில் ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படுகிறது. இதற்காக 770 ஆதார் பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆதார் பதிவு முகாம்கள் பள்ளிகள் துறையின் மூலமாக நடத்தப்பட்டு, அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் பதிவு செய்யப்பட உள்ளது. முக்கியமாக பள்ளிக்கல்வித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த ஆதார் பதிவுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. முழுக்க முழுக்க மாணவர்களுக்கு இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரையில் அனைவரும் ஆதார் அட்டையை எளிமையாக பெற்றுக் கொள்ள முடியும்.
தற்பொழுது முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 முதல் 20, ஆதார் பதிவு கருவிகளை பயன்படுத்தி ஆதார் முகாம்களை ஒவ்வொரு பள்ளியாக சென்று முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.