கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் ப்ரிகேஜி முதல் 6-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள பழைய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு தற்காலிக சிமெண்ட் கூரை கொட்டகையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் அந்த தற்காலிக கொட்டகையில் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் இருப்பதாகவும் மாணவர்களுக்கு கழிப்பறைகளும் இல்லாத நிலையில், அரசு மாற்று ஏற்பாடுகளை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இன்று பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டவும், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டுமென பள்ளியை முற்றுகையிட்டதோடு பள்ளி வாயில் முன்பு கையில் பதாகைகளுடன் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த பிடிஓ மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.