திருத்தணியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்மின்வெட்டால் மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் பல மணி நேரம் மின்துண்டிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள், மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில், இரண்டு முதல் நான்கு மணி வரை தொடர்ச்சியாக மின்சப்ளை நிறுத்தப்படுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை பொதுத் தேர்வு துவங்கியுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாலை, 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.
இதனால் கிராமப்புறத்தில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி படித்து வருகின்றனர். மின்வெட்டு இதே நிலை தொடர்ந்தால், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுவதில் சிக்கல் ஏற்படுவதுடன் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி, கற்றல் திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.