பெற்றோர் செலவுக்காக கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து அதன் மூலம் மரக்கன்றுகள் வாங்கி மரம் வளர்க்கும் சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறான். தனியொருவனாக இந்த சிறுவன் செய்யும் செயல் மற்றவர்களையும் மரம் வளர்க்க ஊக்குவித்து வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் பரமன். இவர் வடுகபட்டி அரசு பள்ளியில் +2 படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே வீட்டில் மரக்கன்று நட்டு வளர்ப்பதில் ஈடுபாடு கொண்ட பரமன், கடந்த நான்கு ஆண்டுகளாக பெற்றோர் செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து மரக்கன்றுகள் வாங்கி நடத் தொடங்கினார். வேம்பு, நாவல், கொன்றை உள்ளிட்ட மரக்கன்றுகளை வாங்கி தனது குடியிருப்புப்பகுதி, கோவில்கள், நீர்நிலைகளின் அருகில் நடத்தொடங்கிய பரமன், கடந்த ஓராண்டில் 600-க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
படிப்பிற்கு நடுவே மரம் வளர்ப்பு பணிகளில் ஈடுபட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சிறுவனின் முயற்சியை அனைவரும் பாராட்டி ஒத்துழைப்பும் அளித்து வருகிறார்கள்.