திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேதியியல் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர் ஒருவர் நேற்று முதல் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளவர் ஜீவா. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இவர் GATE தேர்வில் அகில இந்திய அளவில் 76 ஆவது இடம் பிடித்தவர். NET தேர்விலும் தேர்ச்சி பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி வேதியியல் படித்தவரை, பேராசிரியர் தியாகராஜன் ஆராய்ச்சி மாணவராக தன்னிடம் படிக்குமாறு தெரிவித்ததாக தெரிகிறது. இதை அடுத்து ஜீவா ஆராய்ச்சி மாணவராக சேர்ந்துள்ளார்.
ஆனால் தனக்கான ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விடாமல் பேராசிரியரின் சுய வேலைகளை(தண்ணீர் பிடிப்பது, ஜெராக்ஸ் எடுக்க சொல்லுவது, வீட்டு வாட்ச்மேன் போன்ற வேலைகளை வாங்குவது) செய்ய கட்டாயப் படுத்துவதாக ஜீவா குற்றம் சாட்டுகிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்பு அமர்ந்து நேற்றிலிருந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு கிடைக்கவேண்டிய உதவித்தொகையை தராமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உபகரணம், வேதியியல் பொருட்கள் தராமல் புறக்கணிக்கப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு புகார் அளித்ததை தொடர்ந்து, சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியுள்ளேன்.
இதனால் என்னுடைய கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், என்னைப் போன்ற ஆராய்ச்சி மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆராய்ச்சி மாணவியை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறார். என்னிடம் இது குறித்த ஆதாரம் உள்ளது. மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பேராசிரியர்கள் மீதும், மாணவர்களை கொத்தடிமைகளாக நடத்தும் பேராசிரியர்கள் மீதும் குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் ஜீவா.
இதுகுறித்து துறை தலைவரிடம் கேட்டபோது இன்று சிண்டிகேட் குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாணவர் மற்றும் ஆசிரியர் கொடுத்த தனித்தனி புகாரின் அடிப்படையில் இன்று பல்கலைக்கழக குழு உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார்.