கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை திமுக அரசு சரியான முறையில் கையாளவில்லை என டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவிமடுத்து கேட்டு ஆரம்பத்திலேயே காவல்துறையினர் அக்கறையுடன் செயல்பட்டிருந்தால் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது.
இதன் பிறகும் பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் அங்கே அமைதி திரும்புவதற்கும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு ஒரு கணமும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சின்னசேலம் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி தாளாளரை கைது செய்யக்கோரி தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகி செல்வராணி தாராபுரம் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாயில் கருப்பு துணி கட்டி கையில் பதாகை ஏந்தியவாறு நீதி கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருப்பதாகக் கூறி காந்தி சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதையடுத்து தற்போது உண்ணாவிரத்தில் இருந்து வரும் சமூக சேவகி செல்வராணியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.