மாணவி ஜோதி துர்கா மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ மாணவி ஜோதி துர்கா மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்றுவழியினை சிந்தித்து செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையும், மன வலிமையையும் தரவேண்டியது நம் கடமை. செய்வோம் அதை” என்று தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்று காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவியின் தற்கொலை குறித்து தங்களது இரங்கலையும், தற்கொலை தீர்வல்ல என்ற கருத்தினையும் தெரிவித்து வருகிறார்கள்.