நெல்லையில் கல்விக் கட்டணம் செலுத்தாததை சுட்டிக்காட்டி கல்லூரி முதல்வர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த 19 வயது மாணவி, திடியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள் எடுத்ததால் கட்டணம் இன்றி கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாக கல்லூரி நிர்வாகம் கூறியதால், அவர் அந்தக் கல்லூரியில் சேர்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா என்பவர் தன்னிடம் பேச வேண்டும் என மாணவியை வற்புறுத்தியதாகவும், தொலைபேசி எண்ணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சக மாணவர்களுடன் மாணவி பேசியதை தவறாக சித்தரித்து கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மாணவியை அழைத்து கல்லூரி முதல்வர் கண்டித்தபோது, கல்விக் கட்டணம் செலுத்தாததையும் சுட்டிக்காட்டி மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவி கல்லூரியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கல்லூரி முதல்வர் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.