கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்துரை சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவி நரசிபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பயின்று வந்தார். ஆபத்து காலத்தில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உயரத்தில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியின் போது, மாணவி லோகேஷ்வரியை, பயிற்சியாளர் ஆறுமுகம் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதிக்கக் கூறியுள்ளார். அப்போது மாணவர்கள் கைகளில் வலையை ஏந்தியபடி கீழே தயாராக நின்று கொண்டிருந்தனர். ஆனால் பயத்தில் இருந்த லோகேஷ்வரி குதிப்பதற்கு மறுத்ததாகத் தெரிகிறது.
ஆனால் பயிற்சியாளர் அறிவுறுத்தலின் பேரில் மாணவி கீழே குதித்தார். 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தபோது, முதல் மாடியில் இருந்த சன் ஷேடில் அடிபட்டு விழுந்த மாணவி படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகேஸ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயிற்சியாளர் குதிக்கச் செய்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியை கட்டாயப்படுத்தி கீழே குதிக்க செய்திருக்கும் பட்சத்தில் பயிற்சியாளருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பயிற்சியின்போது மாணவி தவறி விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி லோகேஸ்வரி இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்