சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் பாரதிபிரியன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. டெய்லர் தொழில் செய்து வரும் இவருக்கு ராசாத்தி என்ற மனைவியும், மதுமிதா சென் என்ற மகளும், பாரதி பிரியன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பாரதி பிரியன் இந்த ஆண்டு நடைப்பெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 425 மதிப்பெண்ணும், நீட்தேர்வில் 111 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இதனால் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்ற பாரதி பிரியனின் கனவு தகர்ந்து போனது.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தனியார் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது 30 லட்சம் வரை கேட்டதால், இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியாது என்றும் இன்னும் ஒரு ஆண்டு படித்துவிட்டு அடுத்த ஆண்டு நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வைப்பதாகவும் பாரதி பிரியனின் தந்தை கூறியுள்ளார்.
இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் மனமுடைந்த மாணவன் பாரதி பிரியன் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றபின் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பணிகள் முடித்து வீட்டிற்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்த போது மாணவன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உறவினர்கள் சேர்ந்து நல்லடக்கம் செய்துவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவனின் அக்கா ஆகியோரிடம் கேட்டபோது நீட்தேர்வில் தோல்வியடைந்து மருத்துவ படிப்பில் சேர முடியாது என்று கூறியதால் விரக்தியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.