அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
நீட் தேர்வால் மருத்துவக் கனவை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனிதாவின் மரணம் பற்றி நீதி விசாரணை கோரி ஜிஎஸ் மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இந்தவழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.