மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய, பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா, ஆதரவாளர்கள் அருள்நேசன், பிரிதிவிராஜ் ஆகியோர் நன்னிலத்தில் வைத்து நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் மற்றும் தனது ஆதரவாளர்களை பயன்படுத்துவதாக ஜெயராமன் மீது குற்றசாட்டு எழுந்தது. இந்நிலை மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மக்களை போராட தூண்டுதல் மற்றும் மறியலில் ஈடுபட்டதாக 129 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளைநிலங்களுக்கு நடுவே பதிக்கப்படும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மீது வழக்கு தொடரப்படுவது வருத்தத்தை அளிப்பதாக திருவாரூர் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் நலனுக்காகவே பேராசிரியர் குரல் கொடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.