அனுமதியின்றி கனிம முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அனுமதியின்றி கனிம முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
அனுமதியின்றி கனிம முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
Published on

புதிய தலைமுறை செய்தி எதிரொலி அனுமதியின்றி கனிம முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மணலுக்கு மாற்றாக பாறைகளை உடைத்து, சலித்து மணல் பதத்திற்கு ஏற்ப 'எம்.சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. சமீபமாக இதனை கட்டுமான பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சில குவாரிகள் கடினத்தன்மை இல்லாத பாறைகளை உடைத்து பாறை தூசிகளை கலந்து தரமில்லாத 'எம்.சாண்ட்' விற்பனை செய்கின்றனர். இது ஒன்றரை யூனிட் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. எம்.சாண்ட் ஆலைகள் பொதுப்பணித்துறை மூலம் தரச்சான்று பெற்று செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் . காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 456 எம்.சாண்ட் ஆலைகள் செயல்படுகின்றன. இதில் அரசு உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25, செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 என இரு மாவட்டத்தை சேர்த்து மொத்தம் 50 நிறுவனங்கள் மட்டுமே பொதுப்பணித்துறையின் தகுதி சான்று பெற்று செயல்படுகின்றன. மற்ற கல் அரவை ஆலைகள் பொதுப்பணித்துறை தகுதி சான்று இன்னும் பெறாமல் இயங்கி வருகிறது. இதில் பல ஆலைகளில் தரமில்லாத எம்.சாண்ட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளதாக புதிய தலைமுறையில் பிரத்யேகமாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இச் செய்தியின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது “அனுமதியின்றி கனிம இருப்பு கிடங்குகள் அமைத்து செயல்படுவது குற்றமாகும். எனவே சட்டப்படி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்து கனிம இருப்பு கிடங்கினை உடன் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கனிம இருப்பு அனுமதிதாரர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை கனிமம் எடுத்துச்செல்லும் வாகன ஓட்டுனரிடம் தவறாது வழங்க வேண்டும். வாகன ஓட்டுனர் அங்கீகரிக்கப்பட்ட கனிம முகவர்களிடமிருந்து ஜல்லி, எம்-சாண்டு மற்றும் இதர கனிமங்களை அனுமதி சீட்டு பெற்று தார்பாய் கொண்டு நன்கு மூடி பொதுமக்கள் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி கொண்டுச்செல்லப்பட வேண்டும்.


குவாரிக் குத்தகை உரிமைதாரர்கள் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் இசைவில் தெரிவித்துள்ளவாறு காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே உரிமம் வழங்கப்பட்ட பரப்பில் குவாரிப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் குவாரியிலிருந்து கனிமம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு நடைச்சீட்டில் உள்ள விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு வாகன ஒட்டுநரிடம் வழங்க வேண்டும். எனவே வாகனத்தில் உரிய நடைச்சீட்டு / அனுமதிச்சீட்டு இன்றி கனிமம் எடுத்துச்செல்வது குற்றமாகும்.

மேலும் கனிம இருப்பு கிடங்குகள் / கல் அரைக்கும் இயந்திரங்கள் பதிவு செய்யாமல் இயங்குவதும் வாகனத்தில் உரிய அனுமதியின்றி கனிமம் எடுத்துச் செல்வது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமம் எடுத்துச்செல்வது ஆகியவை கண்டறியப்பட்டால் மேற்படி சட்டப்பிரிவில் அபராதத்துடன் அதிகப்பட்ச தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com