செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் நாய்களால் பெண்கள், மூதாட்டிகள், சிறுவர், சிறுமிகள் தெருவில் நடந்து செல்ல முடியாது நிலை உள்ளது. இந்த தெரு நாய் கூட்டத்தில் ஒரு சில நாய்களுக்கு வெறி பிடித்திருக்கிறது. அதனால் அவை அந்தப் பகுதியில் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்துள்ளன.
இந்நிலையில், சசிகுமார் - சிவகாமி ஆகியோரின் மகன்கள் ஹரிஷ், சஞ்சய் ஆகிய இரு சிறுவர்களும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் சென்ற தெரு நாய் ஒன்று, இரு சிறுவர்களையும் கடித்துள்ளது.
சிறுவர்களின் சத்தம் கேட்டு, இதில் காயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவர்களை அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து ஒரத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விண்ணம்பூண்டி ஊராட்சியில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.