சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் சாலையோர நாய் ஒன்று போவோர் வருவோரை விரட்டி விரட்டி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 14 பேரை ஒரு தெருநாய் கடித்து காயம் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அதில் கேட்பாரற்று சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்லுமாறு கோரிக்கை வைத்தனர். அவர்கள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். இதனையறிந்த திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் காதர், மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி நாய் வண்டியை வரவழைத்திருக்கிறார். அவர்கள் பதுங்கியிருந்த வெறி பிடித்த நாயை வலை போட்டு பிடித்துச் சென்றுள்ளனர்.
பராமரிப்பின்றி கேட்பாரற்று சாலையில் சுற்றித்திரியும் நாய்களினால் மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே சாலையில் கும்பல் கும்பலாக சுற்றி திரியும் நாய்களை பிடித்துச் செல்லுமாறும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெறிநாயால் கடிபட்ட அந்த 14 பேரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.