ஆண்டிபட்டி அருகே மாமன் மைத்துனர்கள் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடிக்கும் விநோதமான கோவில் திருவிழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியில் உள்ள பழமையான முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக மாமன் மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்து கொள்வது வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது.
குடும்பங்களில் வழக்கமாக ஏற்படும் பிரச்னைகள் வளர்ந்து தீர்க்கமுடியாமல் இருந்து வரும் நிலையில் இத்திருவிழாவிற்கு வரும் மாமன் மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் தங்களது பிரச்னைகளை மறந்து துடைப்பத்தால் அடித்து கொண்டவுடன் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்ற ஐதீகத்துடன் கிராம மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளனர்.
அப்படி இந்தாண்டும் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான மாமன் மைத்துனர்கள் ஒன்றுகூடி சேறு மற்றும் சாக்கடை நீரில் நனைத்த துடைப்பத்தை கொண்டு மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு உற்சாக நடனமாடினர்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் உறவினர்களும், இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை காண வரும் பார்வையாளர்களையும் யாரும் அடிக்காமல் அவர்களை மரியாதையுடன் நடத்தி விருந்தளிக்கின்றனர். காலம் காலமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.