கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்படவேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து.‘தமிழை ஆண்டாள்’கட்டுரையில் அவரால் சொல்லப்படாத ஒரு சொல்லைச் சொல்லி மக்களைத் திசை திருப்பி இனக்கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள். இலக்கியப் பரிச்சியம் இல்லாதவர்கள் தமிழை ஆண்டாள் கட்டுரையைப் படிக்காமலேயே அவதூறு பரப்புகிறார்கள்.
ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளைச் சுட்டுக்காட்டியதில் எந்தத் தவறும் இல்லை. செய்யாத ஒன்றுக்கு வருத்தம் தெரிவித்ததே எங்களில் பலருக்கு வருத்தம்.எந்தவொரு கருத்தையும் கருத்தியல் ரீதியாகச் சந்திக்காமல் தனிப்பட்ட முறையில் கொச்சையாகத் தாக்குவதையும், மிரட்டுவதையும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை ஊடகங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக மிக மோசமான முறையில் தாக்குவதையும், போராட்டங்கள் மூலம் மன்னிப்பு கேட்டுக் கெடு விதிப்பதை கண்டிப்பதாகவும். கலைஞர்கள், எழுத்தாளர்கள் பாதுகாப்பிற்கு அரசு முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.