தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும்போது அவமரியாதை செய்வதை கைவிட வேண்டுமென பத்திரிகைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
'பெரு மழையை வெள்ளமாக மாற்றிய தமிழக அரசு' என்ற தலைப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. அதில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக்கூறி அந்த பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டார் ஆகியோருக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் நகர அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குக்கு தடை விதிக்கக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிடவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தனிப்பட்ட முறையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆட்சேபமான செய்தி வெளியிட்டிருந்தாலும், தனக்கெதிராக வழக்கு தொடர நகர அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவதூறு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அந்த செய்தியில் 'ஜெ' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு நீதிபதி அதிருப்தியும் தெரிவித்தார். மேலும், நாட்டின் தலைவர்கள் குறித்து செய்தி வெளியிடும்போது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும், அவமரியாதை செய்வதை கைவிட வேண்டுமெனவும் பத்திரிகைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.