வேலூர் மாவட்டத்தில் காலத்தை தாண்டி ஒரு டென்ட் கொட்டாய் இன்றும் இயக்கி வருகிறது.
மனிதனை மகிழ்விக்கும் ஊடகம் சினிமா. இது இன்பம், துன்பம், சோகம் எனப் பலவற்றை பிரதிபளிக்க கூடியது. அதற்கு பாலமாக இருப்பவை திரையரங்கங்கள். இன்றைக்கு நவீன தொழில் நுட்ப உதவியால் இயக்கி வரும் மல்டிப்ளக்ஸ் திரையரங்கிற்கு முன்னோடியாக இருந்தவை டூரிங் டாக்கீஸ் அல்லது டென்ட் கொட்டாய். பல நடிகர்களை உருவாக்கியதற்கும் அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து ஏற்படுத்தி தந்தது இவைதான். பின் நாட்களில் சிலர் தலைவர்களாக பரிணமிக்க துணை நின்றதும் இந்த டென்ட் கொட்டாய்கள்தான். நாள் முழுவதும் உழைத்துக் களைத்து போன கிராம மக்களுக்கு மாலையில் மகிழ்ச்சியை தரும் இடமும் இவைதான்.
இப்படி பல முகங்களைக் கொண்ட டென்ட் கொட்டாய் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் காணாமல் போனது. ‘வெயில்’ படத்தில் வரும் டூரிங் டாக்கீஸ் ஊர்நாட்டில் எங்காவது இருந்தால் ஆச்சர்யம். அப்படி ஒரு டென்ட் கொண்டாய் இன்னமும் உயிர்ப்புடன் இயக்கி வருகிறது. இந்த கணேஷ் டென்ட் கொட்டாயை தனி ஆளாக வருகிறார் கணேசன்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூட்டுத்தாக்குப் பகுதியில் உள்ளது இந்த கணேஷ் டென்ட் கொட்டாய். நாள் ஒன்றுக்கு மாலை 6.00 காட்சி, இரவு 9.00 மணி காட்சி என திரையிடப்படும் படங்களுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சேர், பென்ச், தரை என 3 வகுப்புகள் இருந்தும் மக்கள் அதிகம் மணலில் அமர்ந்து படம் பார்ப்பதையே விரும்புகின்றனர். டென்ட் கொண்டாயின் கட்டமைப்பு பழமை மாறாமல் அப்படியே இருந்தாலும் ரசிகர்களின் வசதிக்காக காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் ஸ்கிரீன், கியூப் டிஜிட்டல், DTS SOUND என சில மாற்றங்களை செய்து இயங்கி வருகிறார் கணேஷ்.
இது குறித்து உரிமையாளர் கணேசன், “இதற்கு முன் இத்திரையரங்கை 12 பேர் நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் நஷ்டத்தை சந்தித்ததால் இதை கைவிட்டு விட்டனர். இதை 1982-ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறேன். பூட்டுதாக்கு சுற்றுவட்டார பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விரும்பி வந்து படம் பார்த்து செல்கின்றனர். முடிந்த அளவுக்கு புதுப் படங்களையே திரையிட்டு வருகிறேன். இதில் நஷ்டமும் ஏற்படும். அதை பொருட்படுத்தாமல் இதை இயக்கி வருகிறேன்”என்கிறார்.
தகவல்கள் : ச.குமரவேல் - செய்தியாளர், வேலூர்.