தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் (நேற்று முன்தினம்) நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசி, ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால்,“நேற்று நடந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இது முழுக்க முழுக்க எதிர்பாராத விதமாக நடைபெற்ற சம்பவம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அந்த ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. ஏனெனில் இது வருடாந்திர மூடல். நாங்கள் ஆலையை மீண்டும் தொடங்குவதற்கு, நீதிமன்ற மற்றும் அரசின் உத்தரவிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
நீதிமன்றம் மற்றும் அரசாங்கம் கூறுவதை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிப்போம். சமுதயாத்திற்கும், தூத்துக்குடி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நாங்கள் கடைசி வரை நேர்மையாக நடந்துகொள்வோம். தூத்துக்குடி மக்கள் ஆலை எப்படி செயல்பட வேண்டும் என நினைக்கிறார்களோ, அதேபோல் ஆலை பாதுகாப்பாக செயல்படும் என நான் உறுதியளிக்கிறேன். தூத்துக்குடி மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன், சட்டப்படி ஆலையை நடத்துவேன். அதேபோன்று நேற்று நடைபெற்ற சம்பவம் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியுள்ளது என்பதை திரும்ப கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.