தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது ஆட்சியராக இருந்த வெங்கடேஷிடம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மதுரை விமான நிலையத்தில் ரகசியமாக விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றது. துப்பாக்கிச்சூட்டின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனை , மதுரை விமான நிலையத்திற்கு வருமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் புபுல் பிரசாத் கூறியிருந்தார். அதன்படி இரவிலேயே மதுரை வந்து தங்கியிருந்த வெங்கடேசனிடம் விமான நிலைய கருத்தரங்க கூடத்தில் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.
மத்திய படை பாதுகாப்புடன் அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது ஆட்சியர் எங்கிருந்தார்? துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதா? போராட்டத்தின் போது பொதுமக்களின் கோரிக்கைகள் முதல்வருக்கு அனுப்பப்பட்டதா ? காயமடைந்து சிகிச்சைப்பெற்று வருபவர்களை ஆட்சியர் சந்தித்தாரா ? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
விசாரணைக்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் புபுல் பிரசாத், விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காத வெங்கடேசன், சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார்.