புயலால் பாதித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்

புயலால் பாதித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
புயலால் பாதித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
Published on

புயலால் பாதித்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்டா பகுதிகளை நோக்கி நிவாரணப்பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன.

அந்த வகையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு வெளியிட்டார். 4 மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணாக்கர்களுக்கான 4 ஆண்டுகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.48 கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, புயலால் பாதித்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com