மதுரை மாநகர்ப் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகரான விஜயகாந்திற்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும், மாவட்ட அமைச்சர்களை கலந்தாலோசித்து அரசிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேரில் வர முடியாத பலரும் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
விஜயகாந்துக்கு மதுரையில் சிலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைத்திருந்தார். இது குறித்து மதுரை மேயருக்கும் அவர் கடிதம் எழுதி இருந்தார். அதில் மதுரை மாநகர்ப் பகுதியில் முக்கியமான இடத்தில் விஜயகாந்துக்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கை குறித்து பேசிய மதுரை மேயர், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம் தனக்கு கிடைத்ததாகவும், கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோரிடம் கலந்தாலோசித்து அரசிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்துள்ளார்.