விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்துவரும் கலைஞர்கள், சிலைகளை நிறுவி ஊர்வலம் நடத்தி பண்டிகையைக் கொண்டாட அரசு கூடுதல் தளர்வுகள் அளிக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாகக் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டும் கொரோனாவின் பாதிப்பு தொடர்வதால், விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுமா என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு் செய்த உயரமான விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கப்படாததால், சிலை செய்யும் கலைஞர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படுமா இல்லையா என்று தெரியாததால், அந்தக் கலைஞர்கள் சிறிய சிலைகளை மட்டும் செய்து வருகிறார்கள்.