சென்னை மாநகரில் கடந்த 2 ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்.
சென்னையில் கடந்த 2017-18ஆம் ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய 92 சாலை விபத்துகளில் 96 பேர் உயிரிழந்தனர். 51 கோர விபத்துகளும், 993 சிறிய விபத்துகளும் நேர்ந்துள்ளன. 10 சாதாரண விபத்துகளும் நேர்ந்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகள் 82 ஆக குறைந்து 83 பேர் உயிரிழந்துள்ளனர். 51 இடங்களில் பயங்கர விபத்துகளும், 729 இடங்களில் சிறிய விபத்துகளும் ஏற்பட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மொத்தத்தில் 2017ஆம் ஆண்டில் 1277 விபத்துகளும், 2018ஆம் ஆண்டில் 1146 விபத்துகளும் நேர்ந்திருப்பது போக்குவரத்து காவல்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது. இதன் மூலம், 2017ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2018ஆம் ஆண்டில் விபத்துகள் குறைந்துள்ளது.
விபத்துகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மாநகரில் உள்ள 3 ஆயிரத்து 400 பேருந்துகளில், 3 ஆயிரத்து 200 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 36 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து விபத்துகளில் சிக்கும் பழைய பழுதடைந்த மாநகர பேருந்துகளுக்கு மாற்றாக, சிகப்பு நிற புதிய பேருந்துகள் 15 சதவிகித அளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.