அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று புதிய தலைமுறை சர்வேயில் பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியானதா?, தவறானதா? அல்லது அந்தக் குற்றச்சாட்டு வெறும் அரசியலா? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தோம். அதில், பெரும்பான்மையான மக்கள், அதாவது 72.2 சதவிகிதம் மக்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியானது என்று கூறியுள்ளனர். 4.6 சதவிகிதம் மக்கள் தவறானது என்றும், 24.2 சதவிகிதம் மக்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு வெறும் அரசியல் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன. நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் 8 ஆம் தேதியன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.