ஸ்டாலின் இரவு நேரங்களில் கோயிலுக்கு செல்வார்போல் தெரிகிறது - செல்லூர் ராஜூ

ஸ்டாலின் இரவு நேரங்களில் கோயிலுக்கு செல்வார்போல் தெரிகிறது - செல்லூர் ராஜூ
ஸ்டாலின் இரவு நேரங்களில் கோயிலுக்கு செல்வார்போல் தெரிகிறது - செல்லூர் ராஜூ
Published on

மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா சொல்வதுபோல், பெருமாளை விரும்பும் ஸ்டாலின் இரவு நேரங்களில் கோயிலுக்கு செல்வார்போல் தெரிகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சாத்தமங்கலத்தில் உள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது....

" ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார். மேடைக்காக மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார். அது அவருடைய வழக்கமான ஒன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வரலாற்றுச் சாதனைகளை செய்து வருகிறார்.

தேர்தல் அறிக்கையில் மட்டுமே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாகச் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் செய்து வருகிறார்.

திருமாவளவன் தற்சமயம் தள்ளுபடி செய்துள்ள விவசாய கடன்களுக்கு வரவேற்பு தந்துள்ளார் மகிழ்ச்சி. அதே சமயம் தாட்கோ கடனுக்கு சில வழிமுறைகள் என்பது இருந்து கொண்டு இருக்கிறது. அந்த வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.

வழக்குகளை கண்டு நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. கனிமொழி உட்பட பல திமுகவினர் சிறைச்சாலையில் இருந்தவர்கள். 20 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை மட்டுமே ஸ்டாலின் சொல்லட்டும் பார்ப்போம்.

துர்காவே சொல்லியுள்ளார் தலைவர் ஸ்டாலின் பெருமாளை விரும்புவார் என்று சொல்லியுள்ளார். இரவு நேரங்களில் ஸ்டாலின் கோயிலுக்குச் செல்வார்போல் தெரிகின்றது. இலவு காத்த கிளிபோல ஸ்டாலின் இருக்கின்றார். ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கின்றார்.

புகார் சொல்ல வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்ல வேண்டும். இவர் ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார். மக்கள் ஸ்டாலினிடம் கொடுக்கக்கூடிய மனுக்களை பிரித்து உரிய துறைகளுக்கு அனுப்புவதற்கு ஒரு மாதங்கள் ஆகிவிடும். மதுரை சிம்மக்கல் பகுதியில் தலைவர் கலைஞர் சிலை வைப்பதற்கு அனுமதி அளித்துவிட்டோம். திமுகவினரை போல குறுகிய எண்ணம் படைத்தவர்கள் நாங்கள் அல்ல. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை வைப்பதற்கு அனுமதி அளித்து விட்டார்.

உலக நாயகன் கமலஹாசன் தமிழக ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லி வருகிறார். நிலைமை இப்படியிருக்க தேமுதிக பேசுவதில் என்ன தவறு. ஏற்கெனவே அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் பேசியதில் தவறில்லை. கனிமொழி நாளை மதுரை மேற்குத் தொகுதிக்கு வரவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மக்களிடம் கேட்கட்டும் அமைச்சர் என்ன செய்தார் என்று?  நாங்கள் குடிநீர் போன்ற பல்வேறு வசதிகள் செய்து வந்துள்ளோம் என்று மக்களே சொல்வார்கள். இதை முன்னாலேயே அவர் செய்து இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வந்து சொல்வது மக்களை திசை திருப்பும் முயற்சி” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com