“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்

“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்
“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்
Published on

கோவை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும் வீடுகள் இடிந்த அப்பகுதியை பார்வையிட்டு வருகிறார். 

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு, 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். 

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனிக்கு அருகில் தனியார் ஒருவர், தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்தில் 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார். இந்தச் சுவர், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடமே சொல்லி இருக்கிறார்கள். அவர் ஆவண செய்யாத நிலையில், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளார்கள்.

 விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தச் சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காவல்துறை, போராடிய உறவினர்கள் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.
 
"வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை"ப் போல, எதற்காக இத்தகைய தாக்குதலை காவல்துறை நடத்த வேண்டும்? திட்டமிட்டு பொதுமக்களை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார்கள். அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.
 மருத்துவமனை வளாகத்தில் எத்தகைய தாக்குதல்களும் நடத்தக் கூடாது என்ற தார்மீக நெறிமுறைகளை எல்லாம் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. 

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி மக்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கம் அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த 17 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாகக் கட்டித் தரப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com