“ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்” - முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

“ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்” - முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
“ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும்” - முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் இருப்பதால், ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கெனவே தங்களின் விளை பொருட்களை, கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் தமிழக விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை முறையாகச் செய்திடவும் அதற்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கும், ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படுவதில்லை என்ற நிலையே நீடித்து வருகிறது.

இந்த முறை கையிருப்பு நீர் இருந்தும், இதுவரை அ.தி.மு.க. அரசு அணை திறப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆகவே, வருகின்ற ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும். தேவையான விவசாயக் கடன் வசதிகள், வட்டி இல்லாமல், அனைவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் வேண்டும். விதைகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை எவ்விதத் தடையுமின்றி கிடைக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட “மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை” இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com