அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுத்தாள் மறு மதீப்பீட்டில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு துணை வேந்தர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் வித விதமான முறைகேடுகளும் உயர்கல்வித்துறை எப்படி சீரழிந்து உள்ளது என்பதை உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் ஊழல், விடைத்தாள் அச்சடிப்பதிலும் 60 கோடி ரூபாய் ஊழல் என செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, லட்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், விசாரணை அதிகாரியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு துணை வேந்தர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.