தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்த காரணமாக இருந்த ராம மோகன ராவுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கியது ஏன் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகி காத்திருப்புப் பட்டியலில் இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு மீண்டும் பணி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். தனது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கே அவப்பெயரைத் தேடித் தந்தவர் ராமமோகன ராவ் என்றும் தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் முன் வைத்த கோரிக்கைகளால் அவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள ஸ்டாலின், முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தவரை அவர் மீது எந்த விதமான துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
சேகர் ரெட்டிக்கும்- ராம மோகன ராவுக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகமும், வீடும், அவரது மகன்களின் வியாபார நிறுவனங்களும் வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எல்லாம் என்ன ஆயிற்று? ஏன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
நேர்மையாளராக கருதப்படும் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எப்படி இப்படியொரு பணி நியமன அரசு ஆணை வெளியிட ஒப்புக் கொண்டார் என்பது பற்றியெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரைவாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ராம மோகனராவிற்கு மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும், நிர்பந்தமும் என்ன என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.