முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் சென்றனர்.
முதலில் அண்ணா நினைவிடத்தில் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றனர். அங்கு வீட்டின்முன்பு அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அங்கிருந்து இந்து அறநிலையத்துறை அலுவலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற அவர், அங்கு கருணாநிதி சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.