திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதாகவும், அவர் கோயிலுக்கு வழிபட வருவார் எனவும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மூதாட்டி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில், துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவர், 85 வயதான பட்டு என்ற மூதாட்டியை சந்தித்து பேசி நலம் விசாரித்தார்.அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டா என அந்த மூதாட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஸ்டாலின் கோயிலுக்கு வருவார் எனவும், பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் துர்கா ஸ்டாலின் பதிலளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக அரசியல் களத்தில் பார்க்கப்படும் நிலையில், அவரது மனைவி தெரிவித்த கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.