அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் காலனியில் தேர்தல் முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அர்ஜுன், சூர்யா இருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். சௌந்தரராஜன், மதன் ஆகிய இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் கிராமமே சோகத்தில் முழ்கி உள்ளது.
அர்ஜுனனுக்கு திருமணமாகி எட்டு மாத கைக் குழந்தையுடன் மனைவி 4 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரையும் இழந்து தவிப்போருக்கு ஆறுதல்! தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது சாதிய வன்மத்துடன் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. புதிய அரசு அமையும் வரை சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் தேர்தலோடு அவற்றை மறந்துவிட்டு தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டிட வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.