கொரோனா தொற்றால் உயிரிழந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர் மாதவராவ். பரப்புரையின்போதே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவராவின் மகள் தந்தைக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் , நுரையீரல் தொற்று காரணமாக மாதவராவ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.55 மணிக்கு உயிரிழந்தார். 63 வயதான மாதவராவின் இழப்பு காங்கிரஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவராவின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மறுதேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வேட்பாளர் உயிரிழப்பதற்கு முன்பே வாக்குப்பதிவு நடைபெற்று விட்டதால் மே மாதம் இரண்டாம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
ஒருவேளை மாதவராவ் வெற்றி பெறும் பட்சத்தில், அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அங்கு காங்கிரசே மீண்டும் போட்டியிடும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.