தஞ்சை பெரிய கோயிலில் நடக்கவிருந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி தனியார் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் இன்றும், நாளையும் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும் கோயிலை ஒட்டி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது போன்ற படங்கள் பகிரப்பட்டன.
பாரம்பரியம் மிக்க தஞ்சை கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தது. நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வாலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கோயிலில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனியார் அமைப்புகளுக்கு கோயிலுக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினால் கோயிலின் பாரம்பரியம் பாழாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் தஞ்சை பெரியகோயிலில் இன்று மாலை தொடங்கவிருந்த 2 நாள் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் நடக்கவிருந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி தனியார் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும், திட்டமிட்டபடி 2 நாள் தியானபயிற்சி தனியார் இடத்தில் நடக்கும் என்றும் அவர் கூறினார்.