மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர், கைபேசியில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் மகனான 22 வயதான இளைஞர் நிரோஷன் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த நிரோஷன், தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு படுத்துக் கிடந்துள்ளார். மயக்க நிலையில் இருந்த நிரோஷனை பார்த்த அவரது நண்பர்கள் மண்டபம் கேம்ப்பில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் தனியார் வாகன மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சையில் அனுமதித்திருக்கின்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு உள் நோயாளியாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் உடல், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டுவரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் இது குறித்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் சகோதரி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் மண்டபம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் தனது செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்த இளைஞரால் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.