நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வலைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர், அருள்செல்வன் என்பவரது பைபர் படகில் நேற்று மதியம் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 15 கடல் மைல் தொலையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேர், ஐந்து படகுகளில் வந்து சுற்றிவளைத்துள்ளனர்.
இதையடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சூழ்ந்த அவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், வாக்கிடாக்கிகள், டார்ச்லைட் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர். மீன்பிடி சாதனங்கள் பறிக்கப்பட்ட நிலையில், வெறுங்கையுடன் கரை திரும்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்கள், இதுபற்றி கடலோர குழும காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.