இலங்கை சிறைகளிலிருந்து 16 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு கடும் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 5-ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12 பேரும், 8-ஆம் தேதி 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், இலங்கையின் புதிய கடற்தொழில் சட்டத்தின் கீழ் 16 மீனவர்கள் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனித்தனியே ஓராண்டு சிறை என மொத்தம் 2 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், தண்டனையை உடனே அமல்படுத்தாமல் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், 16 பேரும் மீண்டும் எல்லைதாண்டி கைதானால் 2 ஆண்டு சிறைத்தண்டனையை உடனடியாக அனுபவிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.