தமிழகத்தைச் சேர்ந்த 2 விசைப்படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தது. அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர். அதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசைபடகில் 9 மீனவர்களும், மற்றொரு விசைப்படகில் காரைக்கால் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் சென்றிருந்தனர்.
கைதுசெய்த மீனவர்களை இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என தகவல் தெரியவருகிறது.
கடந்த 23 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையால் 59 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதில், 21 மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.