இந்தியக் கடல் எல்லையில் இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்த மீனவர், மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு அலங்காரம் என்ற மீனவருக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.
மேலும், துப்பாக்கியைக் காட்டி தமிழக மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்ததோடு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதல் அச்சம் காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பினர். காயமடைந்த ஜேசு அலங்காரம், மதுரை தனியார் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை கடற்படையினர் மீது குற்றம்சாட்டியுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.