தமிழக ரயில்வே காவல்துறையினருக்கு முதுகுத் தண்டு பாதுகாப்பு பயிற்சி முகாம்

தமிழக ரயில்வே காவல்துறையினருக்கு முதுகுத் தண்டு பாதுகாப்பு பயிற்சி முகாம்
தமிழக ரயில்வே காவல்துறையினருக்கு முதுகுத் தண்டு பாதுகாப்பு பயிற்சி முகாம்
Published on

தமிழக ரயில்வே காவல்துறையினருக்கு முதுகுத் தண்டு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு கழுத்து, முதுகுத் தண்டுவடப் பிரச்சனைகளை சரிசெய்வது குறித்து தனியார் மருத்துவமனையுடன் இணைந்து தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் "நிமிர்ந்து நில் காவலனே" என்ற மருத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங், ஐ.ஜி கல்பனா நாயக் மற்றும் சென்னை, திருச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் மாவட்டத்தை சேர்ந்த 150 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் காவலர்களுக்கு கழுத்து மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறியப்பட்டு, அதற்கு தீர்வு காணுவதற்குண்டான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை தனியார் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுரளி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தனியார் மருத்துவர் பாலமுரளி, நாட்டு மக்களை பாதுகாக்கும் முதுகெலும்பாக காவலர்கள் திகழ்வதாகவும், அவர்களின் முகுகெலும்பு பாதுகாப்பாக இருக்க பயிற்சி வழங்குவது அவசியம் என அவர் தெரிவித்தார். மேலும், அதிகபடியான நேரம் உட்கார்ந்திருப்பதால் முதுகுத் தண்டு மற்றும் கழுத்து வலி ஏற்படுவதாகவும், முடிந்த அளவு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் புகை பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனையை விட நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம் என்ற அவர், உலகிலேயே இரண்டாவது பிரச்சினையாக முதுகு மற்றும் கழுத்து வலிக்காக மருத்துவர்களை மக்கள் அணுகுவதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங், "24 மணி நேரமும் ரயில்வே காவல் துறையினர் பந்தோபஸ்து போன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உடலின் முக்கிய உறுப்பான முதுகுதண்டு மற்றும் கழுத்தில் வலி ஏற்படுவதாக காவலர்கள் கருத்து தெரிவிப்பதாக கூறினார். எனவே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனியார் மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து முதுகுத் தண்டு வலி குறித்த 2 மணி நேரப் பயிற்சியை இன்று வழங்கி வருவதாகவும், இந்த பயிற்சிகளை கடைபிடித்தால் காவலர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே காவல்துறை ஐ.ஜி கல்பனா நாயக், காவலர்கள் நாள் தோறும் முடிந்தளவு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், காவல் துறையினர் சீருடை அணிந்து செல்வது உடலளவில் உத்வேகத்தை அளித்தாலும், மனதளவில் தங்களை வலுபடுத்தி கொள்ள இது போன்ற பயிற்சிகள் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரயில் மற்றும் ரயில் நிலைய நடைபாதைகளில் நடக்கும் செல்போன் பறிப்புகளைத் தடுக்க அதிகபடியான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருப்பதாகவும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், தொழிற்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை டிராக் செய்து கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க: 'ஹோலி என்றால் ஜாலி' சென்னையில் வண்ணங்களுடன் கொண்டாடிய மக்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com