பொதுத்தேர்தலை காட்டிலும் இடைத் தேர்தலுக்கு எப்போதுமே அதிகபடியான மவுசு இருப்பது வாடிக்கையே. அதே வகையில்தான் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சுவார்த்து அரசியல் கட்சிகளிடையே சூடுபிடித்திருக்கிறது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுகவின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையை அக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஏனெனில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈடுபட்டு வரும் வேளையில், தங்கள் தரப்பிலிருந்தும் வேட்பாளரை நிறுத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக இந்த இடைத்தேர்தலில் எந்த அணிக்கு தனது ஆதரவை கொடுக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுத்திருந்த நிலையில்தான் அண்ணாமலையுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.
இருப்பினும் இந்த சந்திப்பு குறித்த தகவல் நேற்று வெளியாகியிருந்தாலும் ஓ.பி.எஸ் தரப்பு அறிவிப்பு பரபரப்பை கிளைப்பியிருந்தது. இதனிடையே பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை காட்டிலும் அவர்களே தனித்து போட்டியிடலாமா என்றெல்லாம் பாஜகவுக்குள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதே வேளையி, “நாங்கள் போட்டியிடவில்லை என்றால் பாஜக ஆதரவு கேட்டால் ஆதரவளிப்போம்” என்று ஓ.பி.எஸ் கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுமா அல்லது பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டிருப்பதால் இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கலை மற்றும் ரவீந்திரன் துரைசாமி ஆகியோர் கருத்துகளை புதிய தலைமுறையிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
அதன்படி, “பாஜகவின் ஆதரவை திறந்த மனதோடு ஓ.பி.எஸ் கேட்கிறார். மோடி ஆட்சியே மீண்டும் மத்தியில் வரவேண்டும் என்ற ஈடுபாட்டோடு ஓ.பி.எஸ் பாஜகவை அணுகுகிறார். மறுபுறம் இ.பி.எஸ் தரப்பினரோ 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றி அப்போதுதான் சொல்ல முடியும் என்ற நிலைப்பாட்டில் அணுகுகிறார்கள். ஆனால், தங்களுக்கு யாரெல்லாம் ஆதரவளிக்கிறார்கள் இல்லை என்பதை ஒரு ரிப்போர்ட்டாக வைத்து தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பி அதை வைத்து கட்சியின் மேலிடம் முடிவெடுக்கும் என கருதுகிறேன். அதேபோல ஆளுங்கட்சியின் கூட்டணியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்துவதால் அதுவும் பலம் குறைந்ததாக இல்லை.” என்று ரவீந்திரன் துரைசாமி தன்னுடைய கணிப்பை கூறியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, மூத்த பத்திரிகையாளர் ரமேஷ், “பாஜகவே தனித்து போட்டியிடுவதற்கு முன்வரக் கூடும். அதிமுகவின் எந்த அணி பக்கமும் சாயவேண்டாம் என்பதையே பாஜகவில் நிலைப்பாடாக இருக்கிறது. இப்படி இருக்கும்பட்சத்தில் இருதரப்பு அதிமுக அணியும் போட்டியிடுவதாக சொல்லியிருப்பதால் தனித்தே போட்டியிடலாம் என்ற முடிவுக்கு பாஜக வரக்கூடும். ஏனெனில் பாஜகவுக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே சுமூகமான உறவு இருப்பதாக தெரியவில்லை. இதனால் வாக்குச் சிதறல் நேர்வதோடு திமுகவின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாவதற்கும் வாய்ப்புள்ளது.” என்றிருக்கிறார்.
இதனையடுத்து பேசிய அரசியல் விமர்சகர் கலை, “இடைத்தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அணி பாஜகவை பொருட்டாகவே எடுக்கவில்லை. அதனால்தான் தன்னிச்சையாகவே வேட்பாளரை முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் ஓ.பி.எஸ். தரப்புக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கம் இருப்பதால் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் முந்திக்கொண்டு பாஜகவின் ஆதரவை கேட்டுச் சென்றிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
ஆனால் கூட்டணி விவகாரத்தில் மாநில தலைமையைவிட அகில இந்திய பாஜக எடுக்கும் தலைமையின் முடிவே இறுதியானதாக இருக்கும். அதேவேளையில் அதிமுகவின் பிளவை பயன்படுத்தி தனித்து போட்டியிட்டு இரு அணிகளும் தங்களை ஆதரிக்க வேண்டும் என்ற யுக்தியில் பாஜக இருக்கும். ஆனால் எடப்பாடி தரப்பு வேட்பாளரை நிறுத்துவதாக முடிவெடுத்துவிட்டதால் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, பாஜக தலைவர் அண்ணாமலையை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இடைத்தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்குமாறு அண்ணாமலையிடன் ஓபிஎஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.