18 வயதுகூட நிறைவடையாத மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்திய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அந்த மாணவி பிஎஸ்சி நர்சிங்க் படிக்க 3 லட்ச ரூபாய் நிதி உதவியும் ஏற்பாடு செய்தார்.
திருவண்ணாமலை பார்வதி அகரம் கிராமத்தைச் சார்ந்த வித்யா கடந்த மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியை சந்தித்தார். சந்திப்பில் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனக்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை எனவும், திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்து திருமணத்தை நிறுத்த உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
(மாவட்ட ஆட்சியர் கந்தசாமி)
வித்யாவை தனது அலுவலகத்தில் அமரவைத்து அவரின் விவரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், வித்யாவின் அம்மாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் உங்கள் பெண் பத்திரமாக உள்ளார் என்றும், 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவி வித்யா படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என்பதையும் எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்த அறுவுறுத்தினார்.
அதன் பின்னர் மாணவியின் பாதுகாப்பு கருதி சமூக நலத்துறையின் மூலமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாணவி நர்சிங் படிக்க விரும்பியதால் 3 லட்ச ரூபாய் நிதி உதவியும் ஏற்பாடு செய்துள்ளார்